கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் ஆனைகட்டி பெரியநாயக்கன்பாளையம் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. வன விலங்குகளின் புகலிடமாக உள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாய பயிர் சேதங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோடை காலம் துவங்கிய நிலையில் வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சிக் காரணமாக கிராமப்பகுதிகளுக்கு காட்டு யானைகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெரியநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கிராமத்திற்கு அருகேயுள்ள தடாகம் காப்புக்காட்டில் இருந்து குட்டியுடன் ஒரு தாய் யானை வெளியே வந்துள்ளது. வன எல்லையில் இருந்து சுமார் 180 மீட்டர் தொலைவில் நாயக்கன்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட அபராஜிதா என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்திற்குள் இரண்டு யானைகளும் சென்றுள்ளது.
அப்போது அந்த தோட்டத்து வீட்டின் கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் யானைக் குட்டி விழுந்து இறந்துள்ளது. தொட்டியில் இருந்து வீசிய துர்நாற்றத்தின் மூலம் குட்டி யானை தொட்டியில் விழுந்து உயிரிழந்தது அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.