தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை: பாஜகவின் முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் திங்கட்கிழமை நடைபெற இருந்த பாஜகவின் முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
பாஜகவின் முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

By

Published : Oct 29, 2022, 9:45 PM IST

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதில் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார்.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்பேரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசை கண்டித்து, வருகின்ற 31ம் தேதியன்று கோவை மாநகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷணன் அறிவித்தார்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெஷ்கடேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அப்போது கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டுமென்ற சி.பி.ராதாகிருஷ்னன் அறிவிப்பை, பாஜக மாநில தலைமை ஏற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முழு அடைப்பு நடத்தினால் சட்டப்படி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் முழு அடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர வியாபாரிகளும், தொழில் முனைவோர்களும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு கடையடைப்பை மறுபரிசீலணை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அண்ணாமலை கோவை மாவட்ட பாஜக தலைவர்களுடன் உரையாடி கோவை மாநகர மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறியதால், அதனை ஏற்று 31ம் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க திங்கட்கிழமை கோவை வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: கிராமிய பாடலுக்கு ஒயிலாட்டம் ஆடிய குழந்தைகள்; கண்களை கவரும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details