கோவை:பாப்பட்டாங்காய் என்னும் பெயருடைய சிறு காய் ஆடிப்பெருக்கு காலத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் காணப்படும். அச்சிறுகாய் நுழையும் வகையில் அளவில் மரத்துண்டில் துளையிடுவர். அத்துளையுடன் பொருந்தும் வகையில் கைப்பிடியுடன் கூடியதாக சிறு குச்சியினைத் தயார் செய்வர். துளையிட்ட மரத்தண்டில் கூம்பு வடிவில் அட்டையை இணைப்பர். வண்ணத்தாள்களால் அலங்கரிப்பர். இப்பொழுது பாப்பட்டான் குழல் தயார்.
ஒரு பாப்பட்டாங்காயை எடுத்து, மரத்தண்டுத் துளையில் பொருத்தி கைப்பிடிக் குச்சியால் வேகமாக அழுத்தினால் அச்சிறுகாய், உடைந்து சிதறும். அப்போது சிறு ஓசை கேட்கும்; கூம்பு வடிவம் அவ்வொலியைப் பெரிது படுத்தும். அது பொட்டுப்பட்டாசு வெடிப்பதைப் போன்று கேட்கும். சிறுவர், சிறுமியர் மிகவும் விருப்பத்துடன் விளையாடுவார். ஆனைமலை வட்டாரத்தில் பாப்பட்டாங்குழல் இல்லாமல் சிறுவர்களுக்கு ஆடிப்பெருக்கு இல்லை.