கோயம்புத்தூர்:கோவை மாநகரில் இரு ரவுடி கும்பலுக்கு இடையே மோதிக் கொண்ட சம்பத்தில், அடுத்தடுத்து இருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரவுடி அமர்நாத் என்பவர் 'தனது கை கால்கள் நன்றாக உள்ளது.. எங்களை சுற்றி வளைத்துவிட்டனர்.. என்ன செய்யப் போறாங்க என்று தெரியவில்லை. இந்த வீடியோவை எல்லோருக்கும் பரப்புங்கள்' என்று மிகவும் பரபரப்பாக மூச்சிறைக்க பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, கோவை நகரில் இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் சத்திய பாண்டி என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொலை சம்பவங்கள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில், ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில், காமராஜர்புரம் கௌதம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில ரவுடிகள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். எனினும், கோவையில் உள்ள ரவுடிகளை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இவ்வாறு போலீசார் தேடுவதை அறிந்த ரவுடிகள் சில வெளிமாநிலங்களுக்கு சென்று பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர்களையும் பிடிப்பதற்காக உதவி ஆணையர் கணேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.