கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சி கோயம்புத்தூர்:சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மோப்பிரிபாளையம் பேரூராட்சியில், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிகுமார் என்பவர் தலைவராக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி, அவருடன் போட்டியிட்ட சுயேச்சைகளும் கவுன்சிலர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் சுயேச்சை வசம் உள்ள இந்த பேரூராட்சியில் எண்ணற்ற முன்னோடி திட்டங்கள், அரசு நிதி மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைகளைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண், இலவச இ-சேவை மையம் எனத் தொடர்ந்து மோப்பிரிபாளையம் பேரூராட்சி நிர்வாக தலைவர் அசத்தி வருகிறார்.
அந்த வகையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க பேரூராட்சி பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்கள், தெருக்கள் என 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கேபிள் மூலமாகப் பேரூராட்சியில் உள்ள கண்காணிப்பு அறையில், பெரிய திரைகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கேமராக்கள் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், தடுக்கவும் பேருதவியாக இருந்து வருகிறது. சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கேமராக்கள், இன்று (நவ.07) பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்த சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி மற்றும் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி, பேரூராட்சித் தலைவர் சசிகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, "அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு முன்வர வேண்டும். இதுபோல கேமராக்கள் அமைக்கப்படுவதால், குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது" எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரூராட்சி தலைவர் சசிக்குமார், ”மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் தனியார் பங்களிப்போடு 100 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பதால், கிராமப்புறங்களில் குற்றங்கள் பெருமளவு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
குற்றங்கள் நடைபெறுவதை எளிதாகக் கண்டறிய சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருக்கின்றன. கோவையில் ஒரு பேரூராட்சியில் முதன்முறையாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பேரூராட்சியில் கட்டணமில்லா இலவச சேவை மையம், நூலகம் என முன்னோடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
மேலும் செல்போன் செயலி மூலம் நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்புவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை, கோவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த திடக்கழிவு மேலாண்மைக்காக பல்வேறு திட்டங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நெல்லை பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; தேசிய ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை..!