கோயம்புத்தூர்:கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற வகையில் பிரபலமானவர் தான், ஷர்மிளா (வயது 23). கோவை வடவள்ளியைச் சார்ந்த இவரைப் பற்றிய செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில், அனைத்து தரப்பினரும் ஷர்மிளாவிற்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் அந்தப் பேருந்தில் பயணம் செய்து ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
கனிமொழி பயணம் செய்த ஒரு மணி நேரத்தில் தன்னைப்பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன் என்பவர், வேலையை விட்டு நீக்கியதாகத் தெரிவித்த ஷர்மிளா, பேருந்து ஓட்டுநர் பணியை விட்டு கால் டாக்ஸி ஓட்டப்போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் ஷர்மிளா சந்தித்து உரையாடினார்.
அப்போது வாடகை கார் வாங்குவதற்காக மக்கள் நீதி மய்யம் பண உதவி செய்யும் எனத் தெரிவித்து அதற்கான முதல் கட்ட காசோலையை ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் வழங்கினார். மேலும் புதிய கார் புக் செய்தவுடன் மீதித்தொகை வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.