கோயம்புத்தூர்:விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள செட்டியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் இதுவரை, சிகிச்சை பலன் இன்றி ஒரு பெண் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயத்துடன் மெத்தனால் கலந்திருந்தது உயிரிழப்புக்கு காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும், விற்பதையும் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில், சிறுமுகை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் பொள்ளாச்சி என தென்னை மரங்கள் அதிகமாக உள்ள இடங்களில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்களை கைது செய்ய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர்.