தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைக்குழந்தையுடன் பேருந்தில் ஏறி நகை திருடிய பெண்களுக்கு தர்ம அடி

கோவை: கைக்குழந்தையுடன் பேருந்தில் ஏறி பயணிகளிடம் நகை திருட முயன்று தப்பியோடிய பெண்களைப் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

நகை திருடிய பெண்கள் மீது தாக்குதல்

By

Published : Apr 27, 2019, 3:31 PM IST

கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் கைக்குழந்தையுடன் 4 பெண்கள் ஏறியுள்ளனர். கூட்டமாக இருந்த பேருந்தில், கைக்குழந்தையுடன் இருந்த பெண் மற்றும் உடனிருந்த மற்றொரு பெண்ணிற்கும் அமர இடமளித்துள்ளனர். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம், இவர்கள் அனைவரும் சேர்ந்து நகை பறிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த சக பயணிகள் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

வைசியாள் வீதியில் பேருந்தை நிறுத்தியதும் நான்கு பெண்களும் பேருந்தில் இருந்து இறங்கிக் குதித்து தப்பி ஒடினர். கெம்பட்டி காலனி பகுதிக்குள் ஒடிய பெண்களை, சில பேருந்து பயணிகள் பின்தொடர்ந்து ஒடிப் பிடிக்க முயன்றனர். திருடன், திருடன் என சத்தமிட்டதால் ஒடிய 4 பெண்களையும் அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து 4 பேரையும் அப்பகுதி மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கடை வீதி காவல் துறையினரிடம், 4 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 4 பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details