கோவை:விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி, தர்மபுரி பகுதியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை கடந்த ஐந்தாம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. இதனையடுத்து, ஆறாம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை அங்கிருந்து கீழே இறங்கி சேத்துமடை உள்ளிட்ட பகுதியில் சுற்றி வந்த நிலையில் செவ்வாய் கிழமை காலை அங்கிருந்து ஆத்து பொள்ளாச்சி, வடக்கிபாளையம், கிணத்துக்கடவு வழியாக சுமார் 140 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மதுக்கரை வந்தடைந்தது.
இதனை அடுத்து அங்கிருந்து குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரி பின்புறம் உள்ள புதரில் தஞ்சமடைந்தது. பின்னர் அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் தென்னந்தோப்பில் புகுந்த மக்னா யானை பயிர் சேதங்களை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சிக்குள் யானை தொடர்ந்து சுற்றி வருவதால் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணிக்கு உதவியாக டாப்சிலிப் கும்கி யானைகள் முகாமில் இருந்து கலீம், சின்னத்தம்பி, முத்து ஆகிய மூன்று கும்கி யானைகள் கோவை கொண்டுவரப்பட உள்ளது.