கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சாலை விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இரவு நேரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாடுகள் ஆங்காங்கே உலா வருகின்றன. குறிப்பாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், ஊட்டி ரோடு, சிறுமுகை ரோடு ஆகிய பகுதிகளில் மாடுகள் உலா வருகின்றன.
மாடு வளர்ப்போர் காலையில் மேய்ச்சலுக்காக விடும் மாட்டை, அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில், சாலையில் நிற்கும் மாடு தெரியாமல் வாகன ஓட்டிகள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
சாலையில் சென்றவர்களை முட்டி தள்ளிய மாடு! இந்நிலையில் நேற்று (நவ 30) அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்று மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும், வாகனத்தில் செல்வோர் மீதும் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர். அந்த மாட்டை பிடிக்க முயற்சி செய்தவர்களையும் ஜல்லிக்கட்டு காளை போல் முட்டி தூக்கி எறிந்தது. சுமார் இரண்டு மணி நேரம் போராடி அந்த மாட்டை பிடித்து மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி வைத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “ மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகமான மாடுகள் சுற்றித்திரிகிறது. அதன் உரிமையாளர்கள் மீது திருநெல்வேலி, குன்னூர், ஆகிய பகுதிகள் போல் அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை; சிசிடிவி காட்சி