சென்னை: ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடியூப் ராஜ் மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக் ஷீப்”. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) சென்னையில் நடைபெற்றது.
இன்றைய யூடியூப் பிரபலங்கள் பலர் இணைந்து நடித்துள்ள இப்படம், பெரும் பொருட்செலவில் நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய 2K கிட்ஸ்களின் பள்ளிப் பருவத்தை திரையில் காட்டும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.
தமிழ் திரைப் பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், ஒரு கல்லூரி கலை நிகழ்வு போல் திருவிழாக் கோலமாக இவ்விழா நடைபெற்றது. இப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் புதுமுகங்களை, தமிழ் சினிமாவின் முன்னணி திரைப் பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
இதையும் படிங்க:பூஜையுடன் தொடங்கிய ‘ராமராஜன் 46’
முதலாவதாக தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் ராஜ் மோகனை மேடையில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி, கதாநாயகன் நரேந்திர பிரசாத்தை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஹீரோ அயாஸை அறிமுகப்படுத்தினார்.