சென்னைமாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 441 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 171 நபர்களுக்கும் என 612 ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு தொகை, ஈவுத் தொகை, வருங்கால வைப்பு நிதி என மொத்தம் 171 கோடியே 23 லட்ச ரூபாய்க்கான காசோலையை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்த நிலையில் இருந்தது, தற்போது அதை சீரமைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
போக்குவரத்து துறை சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்று வருகிறேன். அமைச்சர் சிவசங்கர் எந்த பணியை கொடுத்ததாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நேர்த்தியாக செம்மையாக செய்வார். சிறந்த எழுத்தாளரும் கூட. பே -மெட்ரிக்ஸ் முறையில் ஊதியம் வழங்குவதால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. சுகாதாரம், கல்வி போல மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள துறை போக்குவரத்து. ஒரு பேருந்து 2 நிமிடம் தாமதமாக வந்தாலும் மக்களிடம் எந்தளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம்.
நீங்கள் வகிப்பது பதவி அல்ல, பொறுப்பு என்று கருணாநிதி சொல்வார். அதற்கு ஏற்ப போக்குவரத்து தொழிலாளர்கள் மக்களுக்கு பொறுப்புமிக்க சேவையை ஆற்றி வருகிறார்கள். தொழிற்சங்க கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் செவிசாய்த்து நடவடிக்கை மூலம் எடுத்து வருகிறோம்.
கடந்த 2 ஆண்டில் 288 கோடி கட்டணமில்லா பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். புதிய அரசு அமைந்துள்ள கர்நாடகாவில் இத்திட்டம் அமலாகி உள்ளது.