சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் என்பவரை கிண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு:சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையின் முன்பு இன்று (அக்.25) மாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு ஒன்றை பற்றவைத்து வீசி சென்றுள்ளார். இதில் பலத்த சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்ததை பார்த்த அங்கிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்று கொண்டிருந்த அந்த நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து போலீசாரின் விசாரணையில், அவர் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த மூன்று பெட்ரோல் குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்த நிலையில், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் என்ன? இவரின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்று கிண்டி காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பிரிவுகளின் கீழ் வழக்கு: முன்னதாக, இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் பல காவல்நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளன. இதையடுத்து வெடி பொருள் வைத்திருப்பது, வெடிபொருள் மூலம் தீங்கை ஏற்படுத்துவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர் விசாரணை:மேலும், இவர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு விசிய விவகாரத்தில் சிறைக்குச் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்திடம் அடையாறு காவல் துணை ஆணையர் பொன் கார்த்திகுமார் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிராக பெட்ரோல் குண்டு?:ஏற்கனவே, இவர் மீது 2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் உள்ளன. குறிப்பாக, இவர் 2016-ல் மதுபான கடைக்கு எதிரான போராட்டத்தில் மதுபான கடை மீதும், 2017-ல் தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
அதன் பின்னர் 2023, பிப்ரவரியில் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிலையில், கருக்கா வினோத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆளுநர் மாளிகையில் குண்டு வீச காரணம் என்ன?:பின்னர், 3 மாதங்களாக சிறையில் இருந்த போது தன்னை நன்னடத்தை அடிப்படையில் சிறையிலிருந்து விடுவிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்து விட்டதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் வெளியே வந்துள்ளார். பின்னர் 'இதனால், ஏற்பட்ட ஆத்திரத்திலும்; நீட் தேர்வுக்கு எதிராகவும் தான் இன்றும் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக' மீண்டும் அதே காரணத்தை கிண்டி போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
இவரின் பின்னணி குறித்து தீவிர விசாரணை:இதுகுறித்து ரவுடி கருக்கா வினோத், 'நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் நீட் தேர்வுக்கு எதிராக ஆளுநரை சந்திக்க வந்ததாகவும்; ஆனால், தன்னை யாரும் அனுமதிக்க வில்லை என்பதால் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும்' வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி வினோத்துடன் வேறு யாராவது வந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய உளவுத்துறை அலார்ட்: மேலும் ஆளுநர் மாளிகை வாயில் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் துறை மற்றும் ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ் குமார் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு வருகை தர உள்ள நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:2 நாள் பயணமாக சென்னை வரும் குடியரசுத் தலைவர்.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!