சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியாவணி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்துவருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பல்லாவரம் அடுத்து அனகாபுத்தூர் லட்சுமி நகரில் உள்ள தனது மகள் வீட்டில் மருத்துவ விடுப்பில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.
கடந்த 18ஆம் தேதி வாலிபர் ஒருவர் அந்த வீட்டின தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்துள்ளார். அப்போது, சத்தியவானி தனியாக இருப்பதை பயன்படுத்தி அந்த இளைஞர் கத்தியைக்காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஏழு சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்து சங்கர் நகர் காவல் துறையினரிடம் சத்தியவாணி புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவந்தனர் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் இரண்டு தனிப்படை அமைத்து அனகாபுத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 226 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் சத்தியவாணியிடம் நகையை பறித்துச் சென்றவர் சூளைமேட்டைச் சேர்ந்த கார்த்திக் (எ) புறா கார்த்திக்(28) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 28 நாட்கள் கழித்து ஈரோட்டில் கார்த்திக்கின் மாமியார் வீட்டில் வைத்து துப்பாக்கி முனையில் அவரை காவலர்கள் கைது செய்தனர்.