சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (வயது 20). இவர் பிராட்வேயில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவரான ஐயப்பனும் காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து, இவர்களது காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிய வர அவர்கள், கல்லூரி படிப்பு முடித்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஐயப்பனுக்கும் திவ்யாவுக்கும் இடையே கடந்த சில நாள்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் திவ்யா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (செப்.28) மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மன உளைச்சலில் திவ்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட குடும்பத்தார் உடனே திவ்யாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த செய்தி கேட்ட ஐயப்பன், காதலி உயிரிழந்த சோகத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் இரண்டு கல்லூரி மாணவர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!