விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய இளைஞர்கள் சென்னை செம்பியம் ராகவன் தெருவில் கடந்த 18ஆம் தேதி இரவு இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் விபத்தை ஏற்படுத்திய இருவர் லேசான காயத்துடன் தப்பி சென்றனர். மற்றொரு வாகனத்தில் வந்த இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையில் விழுந்து கிடந்தார். இந்த விபத்தை கண்ட சக வாகன ஓட்டிகள் கண்டும் காணாமல் உயிருக்கு போராடி வந்த இளைஞரை மீட்காமல் கடந்து சென்றுள்ளனர்.
சுமார் அரை மணி நேரம் கழித்து அவ்வழியாக மது போதையில் வந்த நபர் ஒருவர் போலீசாரிடம் அடிபட்டு கிடந்த நபர் குறித்து தகவல் அளித்து உள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிருக்கு போராடி வந்த நபரை வீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் இருசக்கர வாகன எண்ணின் அடையாளங்களை வைத்து நடத்திய விசாரணையில், விபத்தில் படுகாயம் அடைந்த நபர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவப்பிரதாபன் என்பதும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவப்பிரதாபன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பெரம்பூரில் வசித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் சிவப்பிரதாபன் தனது மனைவிக்கு உணவு வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நிகழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திய நபர்களின் வாகன எண் சிசிடிவி காட்சியில் சரியாக பதிவாகாததால் அவர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும் சிவப்பிரதாபனின் செல்போனையும் விபத்தை ஏற்படுத்திய நபர்கள் எடுத்து சென்று உள்ளனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் இரண்டு நாட்கள் கோமா நிலையில் இருந்த சிவப்பிரதாபன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதையடுத்து சிவப்பிரதாபனின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர்களை நெருங்குவதில் சிக்கல் நீடித்த நிலையில், விபத்தை ஏற்படுத்தும் போது இருசக்கர வாகனத்தின் உடைந்த பாகம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த பாகத்தை வைத்து இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து அவர்கள் சென்ற இடங்களில் இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பின் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்தனர்.
சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து எருக்கஞ்சேரி பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு மறைத்து வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றி அதே பகுதியில் பதுங்கியிருந்த ரமேஷ் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் இருந்து வந்தால் தாலி அணிந்து வரக்கூடாதா..? மனமுடைந்து மலேசிய பெண் வெளியிட்ட வீடியோ!