சென்னை: கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன், வேலை முடித்துவிட்டு வீட்டின் வாசலில், தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததாகவும், மீண்டும் மறுநாள் காலை வாகனத்தை எடுக்க வந்தபோது திருடு போய்விட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
இதேபோன்று பல இருசக்கர வாகனங்கள் திருடு போவதாகத் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதேபோன்று, விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் திருடுபோன வழக்குத் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் ஓட்டேரியைச் சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன் சூளை பகுதியைச் சேர்ந்த சோமேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, எட்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணை மேற்கொண்டதில் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ் ஆகிய வீடியோக்களில் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி பலரும் அதிக லைக்குகள் வாங்குவதாகவும், அதேபோன்று வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆவதற்காக அதி வேகமாக செல்லும் வாகனங்களைத் திருடி சாகசமாக ஓட்டி வீடியோ பதிவிட்டு வெளியிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
மேலும், ‘flowers road kolaru’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இதுபோன்று பல வீடியோக்களை திருட்டு பைக்கில் அதிவேகமாக ஓட்டி சாகசம் செய்து வீடியோக்களையும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பாலா என்கிற பாலமுருகன் ‘swiggy’ டெலிவரி ஊழியராக வேலை பார்த்துக்கொண்டே, இந்த இருசக்கர வாகனத் திருட்டிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக திருடும் உயர் ரக இருசக்கர வாகங்களை வைத்து ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் சாகச வீடியோக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.