சென்னை அரும்பாக்கம் பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். அந்த முதியவர் கடந்த 1ஆம் தேதி பிராட்வே சென்றுவிட்டு, அண்ணா ஆர்ச் பகுதியிலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.
அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த நபர், முதியவரை அழைத்துச் செல்வதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றியுள்ளார். சிறிது தூரம் சென்றது அந்த ஆட்டோ ஓட்டுநர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, முதியவரை ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்.
ஆனால் முதியவர் மறுக்கவே அந்நபர் கத்தியால் தக்கிவிட்டு, அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இது தொடர்பாக அந்த முதியவர், அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சிசிடிவியில் அந்த நபரின் ஆட்டோ எண் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையிலும், முதியவரின் செல்போன் சிக்னலை வைத்தும் குற்றவாளியின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். அதன்படி குற்றவாளியை சுற்றி வளைத்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த கரடி சார்லஸ் (எ) சார்லஸ் என்பதும், அவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதும் தெரியவந்தது. அவர், இரவு நேரங்களில் தனது ஆட்டோவில் தனியாக வரும் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தும், அவர்களிடமுள்ள நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சார்லஸிடமிருந்து ஆட்டோ, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திவந்த 4 பேர் கைது; 1 கிலோ தங்கம் பறிமுதல்