சென்னை: மதுரையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள தனியார் வங்கி பயிற்சி மையத்தில் பயின்றுள்ளார். அப்போது அதே பயிற்சி நிறுவனத்தில் பயின்று வந்த சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணை தாயை போல ஒப்பிட்டு ராஜூ பேசி காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனிடையே ஒரு நாள் ராஜூ இந்த பெண் வீட்டிற்கு இரவில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து சென்ற போது, இதனை பார்த்த பெண்ணின் கணவர் ராஜூவை அடித்து விரட்டி அனுப்பி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனால் அந்த பெண் ராஜுவிடம் பேசுவதை தவிர்த்து பெங்களூருவுக்கு பணி சம்மந்தமாக சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக நண்பர்கள் கூடும் போது அந்த பெண் வருவதை அறிந்து கொண்ட ராஜூ மீண்டும் அந்த பெண்ணை சந்தித்து, "காலம் கடக்கலாம் ஆனால் என் காதல் ஒரு போதும் அழியாது" என ஆசைவார்த்தை கூறி உங்களை காதலிக்கின்றேன் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என தெரிவித்து பழக ஆரம்பித்துள்ளார்.
மேலும், ராஜூவின் குடும்பத்தினரும் அந்த பெண்ணிடம் பேசி தனது மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளனர். நாளடைவில் வேறு வழியின்றி அந்த பெண்ணும் ராஜூவை காதலிக்க ஆரம்பித்துள்ளார். 2021ஆம் ஆண்டு கரோனோ காலக்கட்டத்தில் தனது பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவ செலவுக்கு பணம் இல்லை என கூறி ராஜு சிறுக சிறுக பணமாக 30 லட்சம் ரூபாயும், 30 பவுன் நகையாகவும் பெற்றுக்கொண்டுள்ளார்.