சென்னை: டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கர்ப்பிணிகளுக்கு யோகா
"தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 415ஆக உள்ளது. தொற்று குறைந்திருந்தாலும் பரிசோதனையின் எண்ணிக்கையை குறைக்க மாட்டோம். மேற்கு மாவட்டங்களிலுள்ள மகப்பேறு மருத்துவமனை, மருத்துவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
மகப்பேறு மையங்களில் யோகா மற்றும் மூச்சுபயிற்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து, அவ்வாறான சிகிச்சையை அனுமதிக்க கூடாது என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அந்நியர்களை நம்ப வேண்டாம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கிராமத்தில் ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக கரோனா பரிசோதனை மேற்கொள்வதாக கூறி 4 நபர்களுக்கு மாத்திரை கொடுக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருத்துவ சேவை என்று கூறி வரும் அடையாளம் தெரியாத நபர்களை நம்ப வேண்டாம்.
நீட் வேண்டாம் என்பதே நிலைபாடு
கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவு தேர்வு தடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டார். அவர் ஆட்சியின் போதுதான் நீட் தேர்வு வந்தது. ஏதோ திமுகதான் 7ஆம் தேதி ஆட்சிக்கு வந்து 8ஆம் தேதி நீட் தேர்வு கொண்டு வந்தது போல் அவர் பேசுகிறார்.
நீட் வேண்டாம் என்பதுதான் திமுக நிலைப்பாடு. அது போன்று தற்போது ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு குறித்தான தாக்கத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இந்த தீர்மானம் குடியரசுத் தலைவர் அல்லது உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத வகையில் இருக்கும். ஒரு வேலை நீட் தேர்வு நடத்தப்படும் சூழல் வந்துவிட்டால் மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். அரசு அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார்
மூன்றாம் அலை வராமல் தடுக்க பணிகள் மேற்கொண்டுள்ளோம்; ஒருவேளை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தற்போதைய சூழலில் வெளிச்சந்தையில் அரசு தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. இதுவரை 1 கோடியே 44 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 1 கோடியே 36 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தற்போது 6 லட்சம் தடுப்பூசிகள் கையில் உள்ளன. ஜூலை மாத தொகுப்பில் தமிழ்நாட்டிற்கு 71 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு உயர்த்தி தரவுள்ளது. கரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கான பிந்தய சிகிச்சை வழங்க மருத்துவமனையை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.
கருப்பு பூஞ்சை தொற்று பரவலை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 7000 படுக்கைகள் தயாராக உள்ளன. மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இதையும் படிங்க :பிரசவத்துக்கு சென்ற இடத்தில் செவிலியர்கள் சூழ வளைகாப்பு'