சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவத்சலம் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் வரும் ஜூன் 15ஆம் தேதி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது சென்னை உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நேரத்தில் தேர்வை இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "தமிழ்நாடு அரசு ஜூன் 15 ஆம் தேதி முதல் தேர்வை நடத்துவது குறித்த அறிவிப்புகளை அவசரமாக வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு கூடங்களில் தனி மனித இடைவெளி கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. பள்ளிகளை திறப்பது குறித்து, ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என, மத்திய அரசு கடந்த மே 13 ஆம் தேதி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேர்வு எழுதவுள்ள மாணவர்களில் 30 விழுக்காடு பேர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளனர். எனவே, ஜூலையில் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்" என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான, அரசு தலைமை வழக்குரைஞர் விஜய்நாராயண், "இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என, ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளதால் இப்போதே தேர்வு நடத்துவது சரியாக தருணம்" என தெரிவித்தார்.