ஹைதராபாத்:ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி உலக கடிதம் எழுதும் நாள் கொண்டாடப்படுகிறது. இக்கடித நாள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவர், மாணவர்கள் கடிதங்கள் எழுத ஏதுவாகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார். வயதானவர்கள் சமூக ஊடகங்களைத் தவிர்த்து கடிதங்கள் எழுதுவதை ஊக்குவிக்கிறார்.
கடிதத்தால் கிடைக்கும் உற்சாகம்
அன்பானவர்களுக்கு கடிதம் எழுதுங்கள். அதில், உங்களுக்குக் கிடைக்கும் உற்சாகமும், அந்தக் கடிதத்திற்குப் பதில் கடிதம் வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் அலாதியானது.
கடிதம் எழுதும் மக்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். அன்பானவர்கள் எழுதும் கடிதத்தைத் தொட்டுப் படிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை உணர்ந்தால், கடிதம் எழுதும் பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக விடமாட்டீர்கள்.
இன்றிலிருந்து கடிதம் எழுதத் தொடங்குங்கள் கடிதம் எழுதாத தலைமுறை
நவீன உலகமயமான இன்றைய சூழலில், செய்தித் தொடர்புச் சாதனங்கள் பெருகியுள்ளன. ஒரு நொடியில் நம் தொடர்புகொள்ள நினைப்பவரைத் தொடர்பு கொண்டுபேசலாம்.
வேகமான இந்த உலகத்தில், காத்திருப்பின் இனிமையை, சுகத்தை அனுபவிக்காத தலைமுறையாக இன்றைய தலைமுறை உருவாகியுள்ளது. அன்பானவர்களிடமிருந்து வரும் கடிதங்களைப் படித்து அதற்குப் பதில் எழுதும் பேறு பெறாதவர்களாகவும் இன்றைய தலைமுறை உள்ளது.
இதுவரை கடிதம் எழுதியதில்லையா... ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உலக கடிதம் நாளான இன்று ஒரு கடிதத்தை உங்கள் பெற்றோருக்கோ, மகனுக்கோ, மகளுக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, காதலனுக்கோ, காதலிக்கோ எழுதுங்கள்; அதிலுள்ள ஆன்ம திருப்தியையும், மகிழ்ச்சியையும் பெறுங்கள்.
மகளுக்கு கடிதம் எழுதிய நேரு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அலகாபாத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, தனது மகள் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார்.
நேரு தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் தன்னுடைய 10 வயது மகளுக்கு நேரு, இந்தப் பூமியின் கதை, பூமியிலுள்ள நாடுகளின் கதைகள், இயற்கையின் வரலாறு, உலக நாகரிகங்களின் தோற்றம் உள்ளிட்டவற்றை எல்லாம் சுருக்கமாக எழுதினார்.
10 வயது மகளுடன் நேரம் செலவிட இயலாத நிலையில் நேரு இருந்தாலும், தனது மகளுக்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். அதன்மூலம், அவர், தனது மகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்.
அதுபோல, இந்தக் கடித நாளில், உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களுக்கு கடிதம் எழுதத் தொடங்குங்கள், அக்கடிதத்தின் வாயிலாக உலகத்தை அறிமுகப்படுத்தாவிட்டாலும், உங்களின் அக உலகை உங்கள் அன்பிற்குரியவர்களுக்குக் காட்டுங்கள்.
உலக கடிதம் எழுதும் நாளான இன்றே கடிதம் எழுதத் தொடங்குங்கள்.
இதையும் படிங்க:உலக மூத்த குடிமக்கள் நாளில் பெற்றோருக்குச் செய்யப்போவது என்ன?