திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்... திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது... என்று அந்தப் பந்தத்தின் மகத்துவத்தை நம் முன்னோர்கள் அழகுறச் சொல்லிவிட்டு சென்றுள்ளனர். இப்படிப்பட்ட திருமணத்தை நம் முன்னோர்கள் எப்படி நடத்தினார்கள் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. ஒரு பெண்ணை பார்க்கப்போவதில் ஆரம்பித்து, நிச்சயதார்த்தம் நடத்தி, கல்யாணம் செய்வது என்பது திருவிழாவைப் போல சுற்றம் சூழ நடைபெறும்.
ஒரு வீட்டில் திருமணம் என்றால் ஊரே திருவிழாக் கோலாம் பூண்டிருக்கும். 10 நாட்களுக்கு முன்பே உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி திருமண நிகழ்விற்கான பொறுப்புகளை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டு, ஆடல் பாடலுடன் தடபுடலாக இருக்கும். திருமணத்தன்று ஊருக்கே உணவளித்து கொண்டாடுவர்.
திருமண நிகழ்ச்சியின்போது பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் சிறு சிறு போட்டிகள் வைத்து விளையாடுவர். அப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நடக்கும் திருமண பந்தத்தில் இணையும் தம்பதியினருக்கு சிறு ஊடல்கள் ஏற்பட்டாலும், அதனைப் பொறுமையுடன் பேசி சமாதானம் செய்து வைப்பர். இப்படி திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு சந்தோஷ தருணத்திலும், துன்பத்திலும் உறுதுணையாக இருந்து உறவுகளை மேம்படுத்துவர்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆணும், பெண்ணும் நேராகக்கூட பார்க்கத் தேவையில்லை. வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், வீடியோ கான்பிரசிலும் பார்த்துக்கொண்டு திருமணம் செய்கிறார்கள். செல்போனில் பார்த்து, வாட்ஸ்அப்பில் திருமணப் பத்திரிக்கையை அனைவருக்கும் அனுப்புகிறார்கள். திருமணம் முடிந்தவுடன் அடுத்த அரை மணிநேரத்தில் மண்டபமே காலியாகிவிடும். அப்படித்தான் இப்பொழுது திருமணம் நடக்கிறது. இந்த அவரச காலத்தில் திருமணம் மட்டும் விரைவாக நடப்பதில்லை. திருமணப் பந்தமும் விரைவாகவே முறிந்துவிடுகிறது. ஆம், திருமணம் ஆனவர்களில் பத்தில் ஆறு பேர் விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வரிசைக்கட்டி நிற்கிறார்கள்.
இன்றைய திருமண உறவில் நம்மில் யார் பெரியவர்கள், யார் அதிகம் படித்தவர்கள், பணம் அதிகமாக சம்பாதிப்பது யார் என்பது போன்ற கேள்விகளால் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து செல்கிறார்கள். மனக்கசப்பால் பிரியும் உறவுகள் சிலரே என்றாலும், பொறுமை குணம் இல்லாமல் பிரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் காணப்படுகிறது.
அன்றைய காலக்கடத்தில் கூட்டுக்குடும்பம் என்ற ஒன்று இருந்தது. அதனால் குடும்பத்தில் ஏற்படும் சிறு ஊடல்களை கூட நொடிப் பொழுதில் சாமாதானம் செய்து வைத்துவிடுவார்கள். ஆனால், இன்றைய சூழலில் பணம் சம்பாதிக்க வேறு இடத்திற்கு செல்வதாலும், பெரியவர்களுடன் இருக்காமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தனிக் குடும்பமாக பிரிந்து செல்வதால், குழந்தைகள் நம் முன்னோர்களின் அரவணைப்பு என்னவென்று தெரியாமலேயே வளர்கின்றனர்.
மேலும், குடும்பத்தின் மகத்துவமும், திருமணத்தின் அருமையும் நம்மில் பலரும் அறியாமலேயே இருக்கிறோம். இன்றும் சில வீடுகளில் கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தைப் புரிந்து ஒற்றுமையாக வாழ்பவர்களும் உள்ளனர். திருமணம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது வாழ்க்கை. அந்தப் பந்தத்தின் அருமையை உணர்ந்து மன மகிழ்வுடனும், குடும்பத்தினருடனும் இணைந்து வாழ வேண்டும். திருமணமான அனைவருக்கும், இன்று உலக தம்பதியர் தின வாழ்த்துகள்!