சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் மேம்பாலத்தின் கான்கிரீட்டை துளையிடும் இயந்திரத்தை கொண்டு உடைக்கும் பணியில் ஆந்திராவைச் சேர்ந்த திருப்பதி (45) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, திடீரென்று துளையிடும் இயந்திரத்தில் உள்ள வயர் அதிக மின் திறன் கொண்ட ரயிலின் கம்பி மீது பட்டுள்ளது. இதனால் அது அதிக சத்தத்துடன் வெடித்ததால் திருப்பதியின் கையிலிருந்த துளையிடும் இயந்திரம் கீழே விழுந்துள்ளது. இதனை பிடிக்க முயன்ற திருப்பதி அதிர்ச்சியில் கால் தவறி கீழே விழுந்து இரும்பு தூணை பிடித்து காப்பாற்றுங்கள் என அலறியபடி தொங்கினார். மேலும், இவருக்கு கீழ் அதிக மின் திறன் கொண்ட ரயிலின் கம்பி இருந்தது.
இதையடுத்து, உடனடியாக அருகில் பணி புரிந்துக்கொண்டிருந்த ஊழியர் கோடீஸ்வரன்(26) சாதுரியமாக செயல்பட்டு திருப்பதியின் கால் மின்கம்பியில் படாமல் வேறு கயிறு மூலம் அவரை பிடித்து போராடி மீட்டார். பின்னர் அருகிலிருந்த ஊழியர்கள் அனைவரும் வந்தவுடன் திருப்பதியை முழுவதுமாக மேலே தூக்கி அவர் உயிரை காப்பாற்றினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை உதவி ஆணையர், பாண்டி பஜார் காவல் ஆய்வாளர் ஆகியோர் கோடீஸ்வரனையும், உடன் இருந்த ஊழியர்களையும் பாராட்டினர். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க... நடுவானில் விமானத்தில் தீ விபத்து: 159 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்பிழைப்பு!