சென்னை:சென்னையைச் சேர்ந்த கார்த்திகா யாழினி (வயது 40) மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுதா (வயது 39) மற்றும் சத்திய பிரியா (வயது 39) இவர்கள் மூன்று பேறும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் நெருங்கிய நண்பர்களான நிலையில், மூன்று பேரும் சேர்ந்து குறைந்த முதலீடு செய்து தொழில் தொடங்கலாம் என்று எண்ணி உடனே தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை சின்ன தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகை எடுத்து 2011ஆம் ஆண்டு எஸ்.கே.எஸ். பயோ அனலிட்டிகல் ஆப் சிஸ்டம் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
நிறுவனத்தில் வரும் லாபம் மற்றும் நட்டத்தில், சமமாகப் பங்கு என ஒப்பந்தம் செய்து நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கார்த்திகா யாழினி திடீரென ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குச் சென்று அங்கேயே இருந்து பணியாற்றி வந்துள்ளார்.
சுதா மற்றும் சத்திய பிரியா இருவரும் சேர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், அதில் வரும் லாபத்தில் சில மாதங்களாகச் சரியாகப் பங்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்று பேரின் கடின உழைப்பால் அதிக லாபம் வர ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி மருந்துகள் தயாரிக்கும் இயந்திரங்களின் உதிரிப் பாகங்கள் வாங்கி விற்பனை செய்ததால் கரோனா காலத்தில் அனைத்து தொழிலும் முடங்கிய நிலையில் மருத்துவ சம்பந்தமான தொழில் என்பதால் அதில் நல்ல வருமானத்தை ஈட்டி உள்ளார்கள்.
கார்த்திகா யாழினி ஹைதராபாத்திலிருந்ததால் சுதா மற்றும் சத்திய பிரியா ஆகிய இருவரும் சேர்ந்து நிறுவனத்தில் வரும் அதிக லாபம் வருவதைப் பார்த்ததும் கார்த்திகா யாழினிக்குப் பொய்யான கணக்குகள் காட்டத் தொடங்கினர்.