சென்னை: தமிழ்நாடு அரசு பெண்கள் மேம்பாட்டிற்காக உள்ளூர் அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவித்தது. இந்தத் திட்டத்தின் பலன் எந்த அளவுக்கு பெண்களை சென்றடைந்துள்ளது என்பதனை ஆய்வு செய்யும் வகையில் நாகப்பட்டினம், மதுரை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், சென்னையிலும் தமிழ்நாடு திட்டக்குழு ஆய்வு மேற்கொண்டது.
நாகப்பட்டினத்தில் 416 பெண்களிடமும் மதுரையில் 422 பெண்களிடமும் திருப்பூரில் 437 பெண்களிடமும் தகவல் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை முதலமைச்சரிடம் நேற்று சமர்பிக்கப்பட்டது.
பல்வேறு வகையான பணிகளுக்கு செல்லும் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நாகப்பட்டினம், மதுரை, திருப்பூர், ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் மூலம் பயணிக்கக் கூடிய பெண்களில் 48% பெண்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 52% பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
40% பெண்கள் குடும்பத்தாரை சார்ந்து இல்லாமல் சுயமாக வேலைக்கு சென்று திரும்ப மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் உதவியாக உள்ளது. பணிக்குச் செல்லும் பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் மூலம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது.