தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணை புகார் அளித்தவரிடம் லஞ்சம்..பெண் காவல் ஆய்வாளர் கைது

சென்னையில் வரதட்சணை கொடுமை குறித்து புகார் அளித்த பெண்ணிடம் 20,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

வரதட்சணை கொடுமை புகார் அளித்த பெண்ணிடம் லஞ்சம் பெற்ற மகளிர் காவல் ஆய்வாளர் கைது
வரதட்சணை கொடுமை புகார் அளித்த பெண்ணிடம் லஞ்சம் பெற்ற மகளிர் காவல் ஆய்வாளர் கைது

By

Published : Oct 20, 2022, 7:33 AM IST

Updated : Oct 20, 2022, 7:44 AM IST

சென்னை: கோயம்புத்தூரைச் சேர்ந்த மோனிகாஸ்ரீ என்பவர், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மருத்துவர் வினோத்குமாரை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்தார். முன்னதாக, திருமணத்தின்போது பேசப்பட்ட 200 சவரன் நகையை பெண் வீட்டார் வழங்கவில்லை என மனைவி மோனிகாவை, அவரது கணவர் வினோத்குமார் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனியாக கிளினிக் மற்றும் தனக்கு தரவேண்டிய மீதமுள்ள குறிப்பிட்ட நகைகளை கொடுத்தால் மட்டுமே வீட்டிற்கு வரவேண்டும் எனவும் கூறிய வினோத்குமார், மோனிகாவை வீட்டை விட்டு சில தினங்களுக்கு முன் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து மோனிகா, ஏற்கனவே கடந்தாண்டு கணவர் வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், மருத்துவர் வினோத்குமார் உள்பட 8 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கணவரின் பூட்டிய வீட்டில் தனது கையில் உள்ள மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி, தனது உடைமைகளை எடுக்கச் சென்ற மோனிகாவின் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக வினோத்குமார் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், கணவன் வீட்டிற்கு மனைவி வருவது தவறில்லை என்ற அடிப்படையில் ராஜமங்கலம் காவல்துறையினர் வழக்கை முடித்து வைத்துள்ளனர். இருப்பினும் வினோத்குமார் நீதிமன்றம் வரை சென்று மறு விசாரணை செய்ய உத்தரவு பெற்றுள்ளார். இந்த உத்தரவில் ஏற்கனவே, வரதட்சணை கொடுமை வழக்கு இருப்பதால், அந்த வழக்குடன் சேர்த்து இதனை விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து வரதட்சணை கொடுமை வழக்கை விசாரிக்கும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா என்பவர், வழக்கு விசாரணக்காக ஒரு லட்சம் ரூபாய் அளவில் லஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த வழக்கை முடித்து வைக்கவும், மேலும் 20,000 ரூபாயை மோனிகாவிடம் ஆய்வாளர் அனுராதா லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த மோனிகா, இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்தப் புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் அனுராதாவிடம் மோனிகா பணம் கொடுக்கும்போது, அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக நேற்று (அக்.19) கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கைதான ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:AudioLeak - சாக்கு பை தயாரிக்கும் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட தீயணைப்பு வீரர்

Last Updated : Oct 20, 2022, 7:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details