கோயம்புத்தூர் மாவட்டம் மேடுரைச் சேர்ந்தவர் மனோன்மணி (47). கரோனா ஊரடங்கிற்கு முன்பாக லண்டனில் உள்ள அவரது மகளைப் பார்க்க சென்றதாக அறியமுடிகிறது.
உலகளாவிய பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக அங்கேயே தங்கியிருந்த அவர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 24 ஆம் தேதி திங்கட்கிழமை சென்னை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து,
14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள தனியார் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
விடுதியில் தங்கியிருந்த அவர், அறையைவிட்டு வெளியே வராத நிலையில் சந்தேகமடைந்த விடுதியின் பணியாளர் இதுகுறித்து விடுதியின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
அதன் பிறகு, அவர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மனோன்மணி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதனிடையே, இது தொடர்பாக பரங்கிமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மனோன்மணியின் உடலை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக காவலர்கள் அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் ஒருவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.