சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிலர் ஒரகடத்தில் உள்ள ஜூஸ் கடைக்குச் சென்று, ஊழியரை மிரட்டி, ஓசியில் ஜூஸ் கேட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனை அடுத்து, தற்போது ஆய்வாளராகப் பணியாற்றி வரும் மகிதா கடந்த சில வாரங்களுக்கு முன் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, மருத்துவர் ஒருவர் கருகலைப்பு செய்ததாக அவருக்கு புகார் வந்துள்ளது.
இதையும் படிங்க:மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட 14,000 குழந்தைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது - NCPCR தகவல்
இந்தப் புகாரை உரிய முறையில் விசாரிக்காமல், மகிதா புகாரை வைத்துக்கொண்டு அரசு மருத்துவரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. பின்னர் அரசு மருத்துவரிடம் இருந்து 12 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார்.