சென்னை: திருவள்ளூர் கனகம்மா சத்திரத்தை சேர்ந்தவர் சுப்ரியா (35). இவருடைய தம்பி வெங்கட் ராஜேஷ். மென்பொறியாளரான வெங்கட்ராஜேஷு க்கு பிரான்ஸ் நாட்டில் வேலை கிடைத்துள்ளது.
எனவே வேலையில் சோ்வதற்காக இன்று அதிகாலை 2:30 மணிக்கு விமானத்தில் பாரீஸ் செல்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தாா். தம்பியை வழியனுப்ப சுப்ரியா, கணவர் கிரண் குமார் உடன் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவா்கள் சிறிது நேரம் விமானநிலையத்தில் தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின்பு தம்பி, விமானத்தில் ஏறுவதற்காக, அக்காவை வழியனுப்பிவிட்டு விமானநிலையத்தின் உள்ளே செல்ல தொடங்கினாா்.
அப்போது சுப்ரியா திடீரென மயங்கி விழுந்தாா். இதைப்பாா்த்த தம்பி வெங்கட்ராஜேஷ் அவசரமாக வெளியில் ஓடி வந்தார். அங்கு இருந்த சக பயணிகள் உடனடியாக விமான நிலைய அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனா். விமானநிலைய ஊழியா்கள் விரைந்து வந்து விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுப்ரியாவை அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பாா்த்துவிட்டு திடீர் மாரடைப்பு காரணமாக சுப்ரியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அக்கா உயிரிழந்த சோகத்தில் தம்பி வெங்கட் ராஜேஷ் கதறி அழுதார். அதோடு இன்றைய தினம் செல்லவிருந்த, தன்னுடைய வெளிநாட்டு பயணத்தையும் ரத்து செய்து விட்டார்.
இந்த தகவல் கிடைத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து சுப்ரியா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகள் செய்யப்படுவதை தடுக்க தனிக்குழு அமைக்க கோரிக்கை