திருவண்ணாமலை:திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர், இந்திராணி (47). இவரது கணவர் ராஜா. தனியார் உணவகத்தில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வேலை செய்யும் இடத்தில் காலில் அடிபட்டுள்ளது. இதன் காரணமாக இந்திராணி சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.
இந்நிலையில், இந்திராணி காலில் அதிக வலி ஏற்பட்டதால், நேற்று முன்தினம் திருவண்ணாமலை அடுத்த புது மல்லவாடி பகுதியில் மின்வாரிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள தனியார் மருந்து கடைக்கு, வலியை போக்குவதற்காக ஊசி போடச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருந்து கடையின் உரிமையாளர் சரவணன் என்பவர் ஊசி போட்டுள்ளார்.
இதனையடுத்து, ஊசி போட்டுக் கொண்ட இந்திராணிக்கு, சில மணி நேரங்களில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.