சென்னை விமான நிலையத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தும் போது இலங்கை பெண் ஒருவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததால் பிடிப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கையை சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ (40) என்பதும், இலங்கையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பெண்ணை விமான நிலைய கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2018ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலமாக சென்னை வந்து, சட்டவிரோதமாக சென்னை அண்ணா நகரில் ஒரு வீட்டை லீசுக்கு எடுத்து அங்கேயே தங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் அண்ணா நகர் முகவரியை பயன்படுத்தி ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் முறைகேடாக பெற்று, அதே ஆவணங்களை வைத்து போலி இந்திய பாஸ்போர்டும் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலி பாஸ்போர்ட் மூலமாக தங்கி வந்த மேரியை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேரியிடம் டெல்லி தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகியுள்ள இலங்கை பெண் மேரி, தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தோடு தொடர்புடையவர் என்பதும், இவர் போலி பாஸ்போர்ட் மூலமாக மும்பை, பெங்களூர், சென்னை உள்பட இந்தியா, வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலமாக பயணித்து சென்றதாகம் கூறப்படுகிறது.
மேலும் விடுதலை புலி இயக்கத்திற்காக நிதி திரட்டும் பணியில் மேரி முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும், பல ஆண்டுகளாக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் போலி ஆவணங்கள் மூலமாக மும்பையிலுள்ள வங்கியிலிருந்து பணத்தை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேரிக்கு உதவியாக கெனிஸ்டன் பெர்னாண்டோ, கே.பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், செல்லமுத்து ஆகியோர் செயல்பட்டு வந்ததாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேரியுடன் தொடர்பில் இருந்த 4 பேரை தேடும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அலுவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் நிலையில் பறக்கும்படைகள் - மதுரை எஸ்பி பாஸ்கரன் பேட்டி