கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல்கலைக்கழகத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று (ஜனவரி 10) அறிவித்தார். 2020, 2021ஆம் கல்வி ஆண்டுகளில் பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டன. இதனால் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்படுகிறதா? என்பதில் சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்த பின்னர், நேரடி வகுப்புகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து கல்லூரி மாணவர்களுக்குத் தேர்விற்குப் படிப்பதற்கான விடுமுறையை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
எப்போது வகுப்புகள் தொடங்கும்
இதனால் ஜனவரி மாதம் 21ஆம் தேதிமுதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் எப்போது வகுப்புகள் தொடங்கும் என்பதும் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதும் தெரியாமல் உள்ளது.
இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, "பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
நடப்பு பருவத்தேர்வை பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடத்தினால், அடுத்தப் பருவத்தேர்வை ஆகஸ்ட், செப்டம்பர் மாதம்தான் நடத்த முடியும். வெளிநாடுகளில் ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டு விடும். மேலும் இறுதிப் பருவத்தில் படிக்கும் மாணவர்கள் வேலைக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்படும்.
தேர்வுகள் நேரடியாக நடக்குமா?
தேர்வுகள் காலதாமதம் ஆகும்போது மாணவர்கள் சோர்வு அடையவும் வாய்ப்புள்ளது. தேர்வுகள் நேரடியாக நடக்குமா? ஆன்லைனில் நடக்குமா? என்பதிலும் குழப்பம் ஏற்படும்.