திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வந்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நாளை (மார்ச் 4) கூடுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முத்தரசன், வழக்கமாக நடக்கும் மாநிலக் குழுக் கூட்டம் நாளை கூடுவதாகவும், அதில் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒரே கட்டத்தில் எதுவும் சுலபமாக முடிந்து விடாது என்றார். தொடர்ந்து பலமுறை பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத பேரவை 2016இல் நடந்தேறியது துரதிருஷ்டவசமானது என அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இதற்காக முதன்முதலில் தனது வருத்தத்தைப் பதிவுசெய்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பது கவனிக்கத்தக்கது.