சென்னை: நந்தனத்தில் உள்ள வணிகவரி பணியாளர் பயிற்சி நிலைய அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துறைவாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, "2017-க்குப் பின் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் வரிவசூலாக 93,000 கோடி ரூபாய் வருவாய் எட்டப்பட்டுள்ளது. இது இம்மாதம் இறுதியில் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியாக வரிவசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவில் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு வருவாய்
மேலும் 12,400 கோடி பதிவுத்துறையில் வருவாய் எட்டப்பட்டுள்ளது. அது இம்மாத இறுதியில் 13,500 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆகிய இரண்டு துறைகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு வருவாய் எட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களின் போக்குவரத்திற்கு ஏற்ப பல்வேறு தாலுகாக்களில் பதிவு செய்யப்பட்ட பட்டாக்கள் ஒரே இடத்தில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திமுக தேர்தல் அறிக்கை
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி-க்கான நிலுவைத்தொகை ரூ.15,000 கோடி உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு ஜி.எஸ்.டி-க்கான நிலுவைத்தொகையை முழுமையாகப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் முதல் பணி என்ன தெரியுமா?