தமிழ்தேசிய முழக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியாக சீமானின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களை கொண்டுள்ளது. மே 18, 2009ஆம் அண்டு மதுரையில் அக்கட்சியின் முதல் மாநாடு நடத்தப்பட்டது.
ஈழப் படுகொலைக்கு நீதி பெற்று தர வேண்டும், அதற்கான துணையான திராவிட கட்சிகளை வேரறுக்க வேண்டுமென்று மேடையில் முழங்கிய சீமானை அன்றிலிருந்து தன் அண்ணனாகவும், தங்கள் வழிகாட்டியாகவும் பார்க்கிற இளைஞர் கூட்டம் அவர் பின்னால் திரண்டு நிற்கிறது.
பிரபாகரனுடன் எடுத்த படத்தை வைத்துக்கொண்டு தன் மீதான ஒரு கவர்ச்சி பிம்பத்தை அவர் ஏற்படுத்தியதால் அவருக்கு கூடியிருக்கும் கூட்டம் இது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அவர் கவர்ச்சி பிம்பம் காட்டவில்லை தற்போதைய தலைமுறையிடம் பிரபாகரனை கொண்டு சேர்த்ததுதான் அவருக்கான கூட்டத்தை கூட்டியது என்ற பேச்சும் அடிபடுகிறது.
அதேசமயம், இளைஞர்களின் வாக்குகளை கவரும் கட்சி பிற்காலத்தில் வளர்ந்து நிற்கும் என்பதற்கான சாட்சியாக இருக்கின்றன திராவிட கட்சிகள். அதேபோல் தற்போதைய இளைஞர்களை நாம் தமிழர் கட்சி கவர்ந்திருக்கிறது என்கின்றனர் சீமானின் தம்பிகள்.
இரண்டு பெரிய கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டேன் என கடந்த தேர்தல்களில் தனித்து நின்றது மட்டுமின்றி இந்தத் தேர்தலிலும் அதைத் தொடர்வது அவர் மீது அவரது தம்பிகளுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதேசமயம், இளைஞர்களுக்கு அவர் அளவுக்கு மீறி உணர்ச்சிகளை தூண்டுகிறார், அவர்கள் மத்தியில் ஒரு உணர்ச்சி பிழம்பாகவே வலம் வருகிறார் என்ற விமர்சனத்தையும் அவர்கள் வைக்கிறார்கள்.
முக்கியமாக, தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் புகைப்படத்தை தொடர்ந்து பொதுவெளிகளில் பயன்படுத்தும் சீமான் மீது ஏன் எந்த வழக்குமே பாய்வதில்லை. அவர், மாநிலத்தில் ஆளும் கட்சியுடனும், மத்தியில் ஆளும் கட்சியுடனும் மறைமுகமாக கூட்டு வைத்திருக்கிறார் என்று நாம் தமிழரின் எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
அந்த கட்சி 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணித்தது. ஆனால், அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸை எதிர்த்து பரப்புரையும் மேற்கொண்டது. அதோடு மட்டுமின்றி, “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்றும் சீமான் பேசினார்.
அதன் பின் நடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக நாம் தமிழர் களம் கண்டது. அந்தத் தேர்தலில் 1.1% வாக்குகளை பெற்றது.
அதேபோல், 2019 மக்களவைத் தேர்தலில் 4 விழுக்காடு, உள்ளாட்சித் தேர்தலில் தோராயமாக 10 விழுக்காடு வாக்குகளை பெற்ற அக்கட்சி தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது.
திமுகவை சித்தாந்த ரீதியாகவும், காங்கிரஸை இன ரீதியாகவும், பாஜகவை அரசியல் ரீதியாகவும் எதிர்க்கும் நாம் தமிழர் அதிமுகவை பெரிதாக எதிர்ப்பதில்லை என்ற விமர்சனம் அடிக்கடி எழுகிறது.
ஆனால், அதிமுக பெயரளவில்தான் திராவிட கொள்கைகளை வைத்திருக்கிறது திமுகதான் எங்கள் எதிரி என்கின்றனர் நாம் தமிழர். உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறை சென்று வந்த சசிகலாவை சீமான் சென்று சந்தித்ததிலிருந்தே அவர் யாருக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம் என்று திமுகவினர் சொல்கின்றனர்.