சென்னை : தமிழ்நாட்டின் நிதிநிலை மிக மோசமாக உள்ளதாக தொடர்ந்து அவர் கூறி வந்த நிலையில், அது தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்று (ஆக.9) நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். சுமார் 126 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கடந்த பத்து ஆண்டு கால தமி்ழ்நாடு நிதி நிலைமை தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
வெள்ளை அறிக்கை
இயல்பாகவே திமுகவின் தத்துவம் மற்றும் அதன் குணாதிசயத்தை தெரிவிக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் கூறினார். அரசு நிர்வாகத்தில் எப்போதும் வெளிப்படைத்தன்மை தேவை என்பதால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது என்ற அவர், இதன் மூலம் முறைகேடுகளை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், 2006-2011 வரை திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் வருவாய் உபரியாக இருந்தது, ஆனால் அதன் பின்னர் நிதி நிலைமை சீரழிக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் முடிவில் தமிழ்நாட்டின் கடன் 4.75 லட்சம் கோடியாக உயர்ந்தது என்றார். கடன் வாங்கித்தான் ஆட்சியையே நடத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் அதிமுக ஆட்சி இருந்ததாக குற்றஞ் சாட்டினார்.
மறைமுக கடன் உயர்வு
தமிழ்நாட்டின் கடைசி ஐந்து ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் 3 லட்சம் கோடி என்றும், தலா ஒரு குடும்பத்தின் கடன் மட்டும் தற்போது 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் என்றும் அவர் கூறினார். 2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ் நாட்டின் கடன் சுமை 1.14 லட்சம் கோடி, ஆனால் 2016 இல் அதிமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் கடன் 2.28 லட்சம் கோடி எனக் கூறியுள்ளார்.