அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்தும், அதற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சனாதான சக்திகளை விமர்சித்து பேசிய திருமாவளவன், "தேர்தல் என்பது நமக்கு முக்கியம் இல்லை, போராட்டம் தான் நம்முடைய களம். அடிக்கடி படுகொலைகள் நடக்கின்றன அதற்கு போராட்டம் மட்டும் நடத்தினால் போதுமா என்ற விரக்தி எனக்கும் உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதலைப் போராட்டத்தில் இருக்கிறேன். போராட்டம் மூலமாக மட்டுமே மக்களுக்கு அரசியல் புரிதலை கொண்டு வரமுடியும். இன்னும் 10 ஆண்டு காலம் கூட போராட வேண்டி வரலாம்" என்றார்.
சில ஊடகங்கள் அரக்கோணம் படுகொலையைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகக் கூறிய திருமாவளவன், அதற்கு சில தலித் இயக்கங்களும் துணை போவதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழ் தேசியமும் சமூக நீதியும் மட்டுமல்ல கொள்கை ரீதியாக விசிகவுடன் எந்த சனாதான சக்தியாலும் களத்தில் நிற்க முடியாது. ஒருவனை இருட்டிற்குள் தள்ளி கொலை செய்வதை எப்படி தெரியாமல் நடந்த கொலை என்று ஏற்க முடியும் என்றார்.
"இது அதிமுக-பாமக கட்சிகளின் திட்டமிட்ட சதி. குடிபோதையில் நடந்த கொலை என்பது பொய். அவர்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. இந்த கொலைக்கும் பாமகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றால் அதைக் கண்டித்து அறிக்கை விட வேண்டும். ஏன் இன்னும் அறிக்கை விடவில்லை. இது அரசியல் பகை தீர்க்க நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை. போதையில் வந்தவர்கள் ஏன் அவர்களுக்குள்ளேயே வெட்டிக் கொள்ளவில்லை. தலித்துகள் என்று தெரிந்து தான் போதையில் கூட தெளிவாக கொன்றுள்ளனர்" என்றார் திருமாவளவன்.
அந்த ஊரில் அதிகமாக மண் அள்ளுவதை அதே ஊரைச்சேர்ந்த தலித் இளைஞர்கள் கண்டித்ததாகவும், அதற்கு பழி தீர்க்கவே இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாகவும் கூறிய திருமாவளவன், உயிரிழந்தோர் இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 1 கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.
இதையும் படிங்க: 'சாதியத்தை அறுத்தெறிந்த கர்ணனின் வாள்' - அடுத்தடுத்து குவியும் பாராட்டுகள்