17ஆவது மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் வெற்றியை உறுதிசெய்ய காலதாமதமானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்காக தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருப்பது போல், சாதி மதம் கடந்த இளைஞர் சமுதாயம் ஒன்று திருமாவின் வெற்றி செய்தி கேட்டு வெடி போட காத்திருந்தது.
திராவிட சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட திருமா... அவரை ஏன் கொண்டாட வேண்டும்?
ஏன் திருமா என்ற ஒற்றை மனிதனின் வெற்றிக்காக இத்தனை பேர் காத்திருக்க வேண்டும், சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க செய்ய வேண்டும். இளம் வயதிலேயே திராவிட சித்தாந்த ஈர்ப்பால் அரசியலுக்கு வந்தவர். ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆக்ரோஷமான குரலாய் ஒலித்தது திருமா என்கிற இளைஞனின் குரல். பின்னர் அது ஒடுக்கப்படும் மக்களின் குரல், ஜனநாயகத்தின் குரல், மனிதம் பேசும் குரல் என பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் இறுதிச்சுற்றில் தோற்றிருக்கலாம், திருமா தோற்றாலும் அவர் சித்தாந்தங்கள் தோற்காது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு திருமா தலைமையில் நடந்த 'தேசம் காப்போம் மாநாடு' அதற்கு ஒரு சான்று. மக்கள் பெருந்திரளாக அதில் கலந்துகொண்டு அவரின் கொள்கைகளுக்கு ஆதரவு தந்தனர்.
திருமாவின் சமீபத்திய மேடைப் பேச்சு ஒன்றை உற்று நோக்கினால், திருமாவின் வெற்றியை கொண்டாட ஏன் சாதி, மதம், கட்சி பேதங்கள் கடந்து ஒரு இளைஞர் சமுதாயம் காத்திருந்தது என்பது புரியும்.