சென்னை:கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்பி, டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா (FOREIGN EXCHANGE REGULATION ACT) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாததால், டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் இன்று (செப்டம்பர் 04) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகும், அபராதத்தை செலுத்தாததால் தினகரனை திவாலானவர் என சட்ட ரீதியாக அறிவிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை, இது உரிமையியல் பிரச்னை கிடையாது, என்றார்.