தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக தனித்து போட்டியிட விருப்பம்.. அண்ணாமலை பேச்சின் பின்னணி என்ன?

அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் கருத்துக்கு பின்னணி என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

why Annamalai wants BJP to leave the AIADMK alliance and contest alone
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி தனித்து போட்டியிட அண்ணாமலை விருப்புவதற்கான காரணம் என்ன

By

Published : Mar 18, 2023, 1:15 PM IST

சென்னை:2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போது தயாராகி கொண்டிருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக இருக்க, அதிமுக கூட்டணியில் பல சலசலப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி இருந்தது. இந்நிலையில் அதிமுக, பாஜக இடையே சமீப காலமாக பல்வேறு கருத்து மோதல்கள் உருவாகியுள்ளது. அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக நடுநிலையாக இருந்தது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்னர் அதிமுக, பாஜக கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

சமீபத்தில் பாஜக மாநில பொறுப்பில் இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்ததை பாஜக விரும்பவில்லை. இதனால் அதிமுக, பாஜகவின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். மோதலின் உச்சபட்சமாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை பாஜகவினர் எரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவின் மூத்த தலைவர்கள் 'அண்ணாமலைக்கு பக்குவம் வேண்டும்' என விமர்சனம் செய்திருந்தனர். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோல்விக்கு பின்னர் அதிமுக, பாஜக கூட்டணியின் உறவு சுமூகமாக இல்லை.

முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், பொன்னையன் போன்றவர்கள் பாஜகவை அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தனித்து போட்டியிட தயாராக வேண்டும். இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் ஓபிஎஸ் வாழ்க, ஈபிஎஸ் வாழ்க என்று கோஷங்கள் எழுப்ப முடியும். வெற்றியை விட கட்சியை வளர்ப்பதை முக்கியம்" என கூறியிருந்தார். அப்போதே அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற இருப்பதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 17) சென்னையில் பாஜகவின் நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, "அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக கட்சிப் பணி செய்வேன். பாஜக தனித்து போட்டியிட்டால் தான் தமிழ்நாட்டில் வளர முடியும்" என பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் பாஜக போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் இது போன்ற பல செயல்பாடுகள் பாஜக தனித்து போட்டியிடுவதை விரும்புகிறது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.

ஆனால் அதிமுக தரப்பில் ஆரம்பம் முதலே கருத்து மோதல்கள் இருந்தாலும் பாஜகவுடனான கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூறி கொண்டு வந்தனர். ஆனால் அண்ணாமலையின் சமீபத்திய செயல்பாடுகளை அதிமுகவினர் ரசிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் அலுவலகங்களை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பாஜகவினருக்கு அறியுரை வழங்கியுள்ளார். அதில், "அதிமுகவினருடன் மோதல் போக்கை பாஜகவினர் கைவிட வேண்டும். 2024-ல் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தான் போட்டியிடும்" என கூறியிருந்தார்.

அண்ணாமலை கருத்து குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பாண்டியன், "அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து இறக்குவதற்கு ஈபிஎஸ் தரப்பினர் தயாராகி வருகின்றனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அண்ணாமலையின் வளர்ச்சியை எடப்பாடி பழனிச்சாமி ரசிக்கவில்லை. அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து எடுத்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என ஈபிஎஸ் தரப்பினர் பாஜகவின் மேலிடத்தில் கூறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த அண்ணாமலை அதற்கு முன்பு நாமே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விடுவோம் என்ற எண்ணத்தில் இது போன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்" என கூறினார்.

பாஜகவை பொறுத்தவரையில் கூட்டணி குறித்து முடிவு செய்வது தேசிய தலைமை தான். ஆனால் தனித்து போட்டி என்ற அண்ணாமலையின் கருத்திற்கு பின்னால் பல வியூகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் தேசிய தலைமைக்கு கூட்டணி குறித்து ஒரு சில யோசனைகளை அண்ணாமலை எடுத்து கூறவுள்ளார். அதில், "2024-ல் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பாஜகவிற்கு மீண்டும் ஆட்சி அமைக்ககூடிய வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைத்து இரண்டு, மூன்று இடங்களில் வெற்றி பெற்றால் என்ன லாபம். தனித்து போட்டியிட்டால் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். தற்போது வெற்றியை விட கட்சியின் வளர்ச்சியே முக்கியம்" என தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், "அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டி கூட்டணி அமைத்தாலும் களத்தில் எடுபடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. இரண்டு கட்சி தொண்டர்களும் கூட்டணி கட்சிகளுக்கு வேலை செய்ய மாட்டார்கள். இதனால் கூட்டணி அமைத்தும் இறுதியில் தோல்வியே கிடைக்கும். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டனர். அதே போன்று 2024 நாடாளுமன்ற தேர்தலை அவர்கள் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலுக்குதான் தயாராகி கொண்டிருக்கின்றனர்.

நாம் தனித்து போட்டியிடும் பட்சத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். ஆனால் இவர்களை இறுதி வரை சேர்க்கக் கூடாது என ஈபிஎஸ் உறுதியாக இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து விலகும் அளவிற்கு குறைவான இடங்களை அதிமுக ஒதுக்கியதால் தனித்து போட்டியிட்டோம். அதே போன்று நாடாளுமன்ற கூட்டணி பேச்சுவார்த்தை சமயத்தில் 5 இடங்களுக்கு மேல் அதிமுகவினர் கொடுக்க மாட்டார்கள். அதிகமான இடங்கள் கேட்டால் கூட்டணி முறிந்தது என்று கூற வாய்ப்புள்ளது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தனித்து போட்டியிடும் முடிவிற்கு வாருங்கள்" என தேசிய தலைமையிடம் அண்ணாமலை பேசவுள்ளார் என கூறப்படுகிறது.

அண்ணாமலை கருத்து குறித்து பேசிய அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், "அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமையும். அண்ணாமலையின் கருத்து குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" என கூறினார்கள். மேலும், சில தலைவர்கள் பேசுகையில், "அண்ணாமலையின் கருத்து குறித்து அதிமுகவின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். இது போன்ற கருத்துக்களை அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்" என கூறினார்கள். அண்ணாமலையின் இந்த கருத்து அதிமுக, பாஜக இடையேயான கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details