சென்னை:திரைப்படப் பாடலாசிரியரான சினேகன் கடந்த 5ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி என்பவர், தான் நடத்தும் அறக்கட்டளை பெயரான 'சிநேகம்' என்ற பெயரைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி கேள்வி கேட்பதாகவும் அவர் கூறினார். இதனால் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பாடலாசிரியரான சினேகன் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகார் கொடுத்துள்ளதாக நடிகை ஜெயலட்சுமி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஜெயலட்சுமி, ''கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 'சினேகம்' என்ற பெயரில் அங்கீகாரம் பெற்று அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், தனது அறக்கட்டளைக்கென பிரத்யேக வங்கிக்கணக்கு, பான் கார்டு இருக்கும்போது, நடிகர் சினேகனின் அறக்கட்டளைக்கு செல்ல வேண்டிய நன்கொடை, தனக்கு எப்படி வரும்'' என கேள்வி எழுப்பினார்.
தன்னைக் குறிவைக்கக் காரணம் என்ன?மேலும் அறக்கட்டளையின் பெயரைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறிய சினேகன் ஆதாரங்களை காண்பித்து நிரூபிக்க வேண்டுமெனவும், ஒரே பெயரில் அறக்கட்டளையின் அங்கீகாரம் பெறலாம் எனவும்; சினேகம் என்ற பெயரில் பலர் அறக்கட்டளை நடத்தி வரும் நிலையில் தன்னை மட்டும் குறிவைத்து சினேகன் புகார் அளித்துள்ளது என்ன நியாயம் எனவும் கேள்வி எழுப்பினார்.