சென்னை:சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன.03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யார் இந்த கு.க.செல்வம்?: திமுக-வில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவர்களுள் ஒருவராக இருந்தவர் கு.க.செல்வம். முன்னர் அதிமுக கட்சியில் இருந்த இவர், அக்கட்சியின் சிறந்த ஆதரவாளராக இருந்தார். அதையடுத்து எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், ஜானகிக்கு தனது முழு ஆதரவையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து, 1997ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில காரணங்களால் அதிமுகவில் இருந்து விலகிய இவர், திமுகவில் இணைந்தார்.
அங்கு இவருக்கு, திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் நிர்வாகப் பொறுப்புகளை கவனிக்கும், தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவர், வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்தார். மேலும், இவருக்கு திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியிலும் தனி மரியாதை இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் அதிருப்தி காரணமாக எம்.எல்.ஏ-வாக இருந்தபோதே, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவைச் சந்தித்தார். இதற்கான உரிய விளக்கம் அளிக்காத நிலையில், திமுக கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதையடுத்து, பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கிய அவருக்கு, அங்கு அங்கீகாரம் என்பது குறைவாகவே இருந்தது.
இதனால், அங்கிருந்து வெளியேறிய செல்வம், 2022ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் இணைந்து, கட்சிப்பணி ஆற்றத் தொடங்கினார். அவர் இணைந்த பின்னர், திமுகவில் அவருக்கு மீண்டும் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், நேரடி அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன.03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் அனைவரிடமும் நெருங்கிப் பழகியவர். மேலும், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அன்புத் தம்பியாகவும் பார்க்கப்பட்டார். தற்போது, கு.க.செல்வம் மறைவினைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு திமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.
இதையும் படிங்க:சென்னையில் 47வது சர்வதேச புத்தக கண்காட்சி..பணிகளை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்!