தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும் - ஸ்டாலின்

சென்னை: இடஒதுக்கீடு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Stalin

By

Published : Nov 22, 2019, 3:40 PM IST

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்லூரிகளில் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங்களில் (எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி) அரசியல் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவையில் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரோ, அல்லது மாண்புமிகு பிரதமரோ உரிய பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

2017-18ஆம் ஆண்டுகளில் பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட 9,966 மருத்துவ இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 2,689 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி ஆகிய மருத்துவ இடங்கள் இட ஒதுக்கீட்டின்படி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்தில் மத்திய அரசு கல்லூரிகளில் கிடைத்ததோ வெறும் 260 சீட்டுக்கள்.

2018-19ஆம் ஆண்டில் 12,595 மருத்துவ இடங்கள் பொதுத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டதோ 299 இடங்கள் மட்டுமே. இரு வருடங்களிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இடஒதுக்கீடு கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது மன்னிக்க முடியாத துரோகம்.

ஆகவே, பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017-18, 2018-19ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டன? மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு? என்பது உள்ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும்

மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கின்ற 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்துவதற்கு இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'திமுக - காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்பதுதான் ரஜினி கூறிய அதிசயம்'

ABOUT THE AUTHOR

...view details