சென்னை, மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வருகின்றனர். வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடை பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை பெருநகரில் 01.01.2022 முதல் 15.05.2022 வரையில் நடத்திய கணக்கெடுப்பில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர், 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர், மேலும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.