தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எங்கே இருக்கிறார் முகிலன்..?' - 100 நாட்களை கடந்தும் தொடரும் தேடல்! - முகிலன்

சென்னை: சமூக செயற்பாட்டாளரும், சூழலியல் போராளியுமான முகிலன் காணாமல் போய் 100 நாட்களை கடந்தும், இதுவரை அவர் எங்கே இருக்கிறார் எனும் கேள்வி மக்கள் மத்தியில் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

முகிலன்

By

Published : May 28, 2019, 8:24 PM IST

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்தவர். தூத்துக்குடி ஸ்டெர்லெட் ஆலை, மணல் கடத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்கும் பிரச்னைகளுக்காக போராடி வந்தவர்.

போஸ்டர் பதிவு

இவர் கடந்த பிப்.15ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் தென் மண்டல காவல்துறை ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் மற்றும் டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கர் இருவரும்தான் என்றும் காவல்துறை ஸ்டெர்லைட் வேதாந்தாவின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் தெரிவித்தார்.

முகிலனை மறந்தோம்

மேலும், வீடியோ ஆதாரங்களையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். மேலும், துப்பாக்கிச் சூடு தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அன்றைய தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரயில் மூலம் புறப்பட்டார். ஆனால் காலையில் மதுரை வந்திருக்க வேண்டிய முகிலன் வரவில்லை.

பதாகையுடன் சிறுமி

ரயில் முழுவதும் அவரது நண்பர்கள் தேடியும் முகிலன் கிடைக்கவில்லை. முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினர், எழும்பூர் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், அன்றைய தினம ரயில் நிலையத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது முகிலன் ரயில் நிலையத்திற்கு வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

சமூக வலைதள பதிவு

மேலும் அவரது செல்போன் சிக்னலை வைத்த ஆய்வு செய்துபோது, செங்கல்பட்டு வரை செல்போன் சிக்னல் பதிவாகியிருப்பதும், அதற்கு பிறகு துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முகிலன் காணாமல் போய் 10 நாட்கள் கடந்தும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மாயமான முகிலனை கண்டுபிடிக்கக்கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.

சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்ட விளம்பரம்

இதனை ஏற்ற மாநில டி.ஜிபி டி.கே ராஜேந்திரன், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் முகிலன் குறித்து தகவல் அளித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் சிபிசிஐடி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில் முகிலன் காணாமல் போய் 100 நாட்களை கடந்தும் இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. அவருக்கு ஏதும் நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சம், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details