சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம், கல்லணை, கால்வாய் புதுப்பிப்பு, சென்னை ஐஐடி டிஸ்கவரி கேம்பஸ் வளாக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக நேற்று சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
அரசு விழாவில் அரசியல் கலப்பு ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொண்ட பிரதமர், நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளாரைச் சந்தித்து, ஆசிபெற்றுள்ளார்.
இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்திருக்குமோ என்ற கேள்வி அனைவரின் மனத்திலும் எழுந்துவருகிறது. இருப்பினும் இந்தச் சந்திப்பு குறித்து வெளியான தகவல்களின் அடிப்படையில், இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே எனக் கூறப்படுகிறது.
ஆனால், பாஜகவினர் சிலர் கிராமங்களில் சக்தி வழிபாட்டு முறையைக் கொண்டு சென்று மிஷனரிகளிடமிருந்தும், மதமாற்றும் கூட்டத்தினரிடமிருந்தும் இந்து மக்களைக் காப்பதில் பங்காரு அடிகளார் பெரும் தொண்டாற்றி உள்ளார். எனவே, இவரை பிரதமர் சந்தித்து ஆசி பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, தேர்தல் நெருங்கும் வேளையில், பங்காரு அடிகளார்- பிரதமர் மோடி சந்திப்பு வாக்கு வங்கிகளில் சிறிதளவேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனச் சிலர் எண்ணி களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.