தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு - எப்ஐஆர் முழு விவரம்... - புராஜக்ட் விசா

சீனா நாட்டினர் விசாவை நீட்டிக்க 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையின் முழு விவரங்களை பார்க்கலாம்.

எப்ஐஆர் முழு விவரம்
எப்ஐஆர் முழு விவரம்

By

Published : May 18, 2022, 7:21 AM IST

சீனா நாட்டினர் விசாவை நீட்டிக்க 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 10 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இந்த நிலையில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மான்சா என்னும் இடத்தில் TSPL அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது வேதாந்த குழும நிறுவனங்களில் ஒன்று.

இந்த அனல் மின் நிலையத்திற்கு ஆலைகளை அமைக்கும் ஒப்பந்த பணிகளை செப்கோ (SepCo ) என்னும் சீன நிறுவனம் மேற்கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணி புரிவதற்காக 263 சீன நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பிராஜக்ட் விசாவில் இந்தியா வந்துள்ளனர். இந்த தனியார் அனல்மின் நிலையத்தின் பணிகள் நிறைவு பெறாததால் தொடர்ந்து பிராஜக்ட் விசாவில் வந்த சீன நாட்டினரின் விசாவை நீட்டிப்பு செய்ய அந்நிறுவனம் முயன்றது.

அதன்படி, 263 பேருக்கு விசா காலம் நிறைவு பெற்றதால் அதை நீட்டிக்க அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் என்பவரை TSPL அனல் மின் நிலைய நிறுவனத்தின் நிர்வாகி விகாஷ் மஹாரியா அணுகியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், ஆடிட்டர் பாஸ்கரராமனிடம் இருந்து இமெயில் மூலம் விசா நீட்டிப்பு செய்வதற்கான விண்ணப்ப கடிதத்தை கார்த்தி சிதம்பரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன்படி, கார்த்திக் சிதம்பரம் விசா நீட்டிப்பு செய்ய 50 லட்சம் லஞ்சம் பெற்று அனுமதி கடிதம் வாங்கி கொடுத்துள்ளதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

2010-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது தான், மின் உற்பத்தி மற்றும் இரும்பு உற்பத்தி தொழில் மேற்கொள்ள வரும் வெளிநாட்டினருக்காக புராஜக்ட் விசா அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான புதிய விதிகள் வகுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ,
ஆனால் அந்த விதிகளை மீறி லஞ்சம் பெற்றுக்கொண்டு புராஜக்ட் விசா நீட்டிப்பிற்கான அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கான லஞ்ச பணத்தை மும்பையைச் சேர்ந்த பெல் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலமாக, TSPL நிறுவனம் பரிவர்த்தனை செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இந்த முறைகேடு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரின் கவனத்தை மீறி நடந்திருக்க வாய்ப்பில்லை என சிபிஐ சந்தேகம் எழுப்பியுள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் வேதாந்தா குழும நிறுவனத்திற்கு போர்டு உறுப்பினராக சிதம்பரம் இருந்தாக சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ , மும்பையில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து சென்னையில் இயங்கிய மெல்ட்ராக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்கு 1.5 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்திருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன், டிஎஸ்பிஎல் நிறுவன நிர்வாகி விகாஸ், மும்பையை சேர்ந்த பெல் நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத உள்துறை அமைச்சக ஊழியர்கள் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க : சிபிஐ சோதனை கார்த்தி சிதம்பரத்திற்கு முன்கூட்டியே தெரியுமா? - டுவிட்டர் பதிவால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details