சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
மேலும் வரும் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். அதேநேரம் பிப்.19ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கனவே 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரம் ஒரு பங்காற்றியதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி என்கிற அடிப்படையில் திமுகவினர் கடுமையாகத் தேர்தல் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி முதல் கட்டமாக பிப்.15, 16 மற்றும் 17ஆகிய நாட்களிலும், 2ஆம் கட்டமாக பிப்.24 மற்றும் 25 ஆகிய நாட்களிலும் பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை காரணமாக வேட்பு மனுத் தாக்கல் செய்கிற இறுதி நாளில்தான் இரட்டை இலை சின்னம் உறுதி செய்யப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் ஈபிஎஸ் தரப்பினர் மிகவும் உற்சாகத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.