சென்னை:நவ.12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு தான். இவற்றை வாங்குவதற்காக மக்கள், கடை வீதிகளை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வேலை செய்து வருவோர்களும், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் வேலை செய்யும் நகரங்களில் இருந்து புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்கிச் செல்ல முனைப்பு காட்டுகின்றனர். மேலும் பலர் பட்டாசுகளை உள்ளூர் கடைகளில் வாங்குவதை விட, பட்டாசு நகரமான சிவகாசி போன்ற ஊர்களுக்கு நேரில் சென்று வாங்குவதை தான் அதிகம் விரும்புகின்றனர். அப்படியாக வாங்கும் பட்டாசுகளை பேருந்துகளிலோ அல்லது ரயில்களிலோ தான் கொண்டு செல்கின்றனர்.
ரயில் பயணங்களின் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இத்தடையை மீறி, ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால், ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை இரயில்வே காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை கோட்டத்தில் உள்ள 245 இரயில் நிலைகளில் 1300 போலீசார், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.